2021ஆம் மக்கள் தொகையின் புள்ளிவிவரப்படி 18 வயதுக்கும் குறைவான சிறார்களின் எண்ணிக்கை சுமார் 9.13 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிகை மொத்த மலேசிய மக்கள் தொகையில் 28% ஆகும். மொத்த மலேசிய தொகையில் 1/3 அளவிலான விகிதத்தில் இருக்கும் அவர்களுக்குக் கட்டாயம் பல முன்னுரிமைகள் வழங்கப்பட வேண்டும். சிறப்பான வாழ்க்கை முறையில் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ எல்லா வகையிலும் சிறார்கள் தகுதியுடையவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
குழந்தைகள் மற்றும் இளவயதினர்கள் தகுந்த முறையில் பாராமறிக்கப்பட்டால்தான் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். பண்பான மற்றும் நேர்மறையான எண்ணங்கள் அவர்களுள் நீண்ட நாள் விதைக்கப்பட்ட பலனாக அவர்களின் எதிர்காலம் அர்த்தமுள்ளதாக அமையும். சிறுவயதினரின் நலனைக் கருதி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயற்பாடும் நாட்டின் வருங்கால முன்னேற்றத்திற்கு வித்திடும் முதலீடுகளாகும்.
உலகளாவிய குழந்தைகளுக்கான நன்மைகள்
இந்த நாட்டில் வளர்ச்சிக்குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை ஈராக், காசா போன்ற நாடுகளைக் காட்டிலும் மிகவும் மோசமான விகிதத்தில் உள்ளது. பாலின் விலை அதிகமாக உள்ளதால் பிறந்த குழந்தைக்கு முதல் 1000 நாட்களுக்குப் பால் மற்றும் சத்துள்ள உணவுகளை வழங்க முடிவதில்லை. இந்த பிரச்சனையைக் களைவதற்கு ஒவ்வொரு பிறந்த குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை பண உதவி வழங்கப்படும். அந்த தொகை குழந்தைகளின் பெற்றோரின் வங்கி கணக்கில் வைப்பு செயப்படும். இந்த திட்டம், குழந்தைகள் தங்களின் 6-வது வயதை அடையும் வரை அமல்படுத்தப்படும்.
குடியுரிமைக்கான உத்தரவாதம்
சட்டப்பிரிவு 15(2)ஐ திருத்தம் செய்யும் நோக்கமாக இந்நாட்டின் குடியுரிமை பெற்ற தாய் அல்லது தந்தைக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் இனம், சமயம் என வேற்றுமை பாராமல் மலேசிய நாட்டின் குடியுரியைப் பெறுவார்கள். கூட்டாட்சி அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெறும் கட்டுரை 14(1) (b)யும் திருத்தி அமைக்கப்பெறும். அதாவது, மலேசிய குடியுரிமையைப் பெற்றுள்ள தாய் வெளிநாட்டில் குழந்தையைப் பெற்றெடுத்தாலும் அந்த குழந்தைக்குக் குடியுரிமை உத்தரவாதம் வழங்கப்படும். அதே சமயம், அந்த சட்டத்திருத்தத்தில் தத்தெடுக்கப்படும் குழந்தைகளும் இயல்பாக தங்களின் குடியுரிமையைப் பெறுவார்கள் என்று உத்தரவாதிக்கப்படுகிறது.
சிறார்களுக்கான துறை
பல்வேறு காரணங்களினால் குழந்தைகளின் நல்வாழ்க்கை முறை தடைப்படுகிறது. அவை, குழந்தை சித்தரவதை, பாலியல் துன்புறுத்து, அக்கரையின்மை மற்றும் புறக்கணிப்பு போன்றயனவாகும். இம்மாதிரியான அச்சுறுத்தல்களுக்குத் தகுந்த நிவாரணம் தேவை. அதே சமயத்தில், இதனைச் சார்ந்த விழிப்புணர்வுகள் சமூக ஊடகங்களின் பரவப்படுவதால் இவை குழந்தைகளின் வளர்ச்சிக்கும் வித்திடுகின்றன. ஆகவே, இந்த பிரச்சனைகளை வேறோடு களைவதற்கு அவர்களுக்கான துறை அல்லது நிறுவனங்களை அமைத்து சிறார் பாதுகாப்பை மென்மேலும் உறுதி செய்ய வேண்டும்.
1500 குழந்தை பாதுகாவளர்கள்
1500 குழந்தை பாதுகாவளர்களை நியமிக்கும் பணியைத் துரிதப்படுத்தினால் ஒரு பாதுகாவளர் 30 குழந்தைகளைக் கண்காணிக்கும் விகிதத்தை உறுதி செய்ய முடியும். இந்நாள் வரை ஒரு பாதுகாவளர் சுமார் 100 குழந்தைகள் சார்ந்த வழக்குகளைக் கையாள நேருகிறது. ஆகவே, இந்த திட்டத்தைக் கூடிய விரைவில் அமல்படுத்தினால் குழந்தைகள் சார்ந்த வழக்குகள் சரியான முறையில் தீர்வை அடையும்.
குழந்தைகளின் ஆரம்ப கால கல்வியை மறுசீரமைத்தல்
தொற்றுநோய் தொடங்குவதற்கு முன் ஆரம்ப கல்வி கூடங்களில் 4 மற்றும் 5 வயது குழந்தைகளின் சேர்க்கை இன்னும் குறைவாக அதாவது 83.5% மட்டுமே இருந்தது. தொற்றுநோய் விரைவாகப் பரவிய காலக்கட்டத்தில், சுமார் 1394 பாலர் கல்வி கூடங்கள் மூடப்பட்டன. இதனால், பாலர் பள்ளிகளின் எண்ணிக்கை கடும் சரிவைச் சந்தித்தது. இந்த நிலைமை இன்னும் மோசமடையும் வண்ணமாக, நீண்ட நாட்கள் நீடித்த தொற்றுநோய் பரவலால் பாலர் பள்ளியின் கட்டணத்தை வழங்க முடியாமல் பல குடும்பங்கள் தவித்தன. இந்த இக்கட்டான சிக்கலைத் தவிர்ப்பதற்கு, நிறைய பாலர் பள்ளிகள் ஆங்காங்கே கட்டப்பட வேண்டும். ஆரம்ப கல்வி பாடத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். குடும்பம் மற்றும் சமூக பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு அந்த பாடத்திட்டங்கள் அமைய வேண்டும். அதனுடன், சிறார்களுக்குத் தேவையான பண வசதியை வழங்கி அவர்கள் மீண்டும் பள்ளியில் பயிலும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
சிவில், ஷரியா போன்ற நீதிமன்ற அளவில் குழந்தைக்களுக்கான உரிமை சட்டக்குழுவை அமைத்தல்
சிவில், ஷரியா போன்ற நீதிமன்ற அளவிலான சட்டக்குழுவைக் குழந்தைகளின் நலனுக்காக அமைக்க வேண்டும். இந்த செயல்திட்டம் நீதிமன்றத்தை உட்படுத்திய குழந்தைகளின் வழக்குகளுக்குத் தக்க உதவியாக அமையும். குழந்தை திருமணம், குழந்தை பராமரிப்பு உரிமை மற்றும் வருகை உரிமை போன்ற சட்டத்தை முன்நிறுத்திய வழக்குகளைக் கையாளுவதற்குச் சிறப்பு சட்டக்குழுவை அமைக்க வேண்டும். அதே வேளையில், தற்போது குழந்தைகளுக்குச் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. இதனால், அவர்களுக்கான முக்கியத்துவம் புறக்கணிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. குழந்தைகளுக்கான சட்டக்குழு நியமிக்கப்பட்டால் இந்த சிக்கலைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் அவர்களின் முக்கியத்துவமும் மீட்டெடுக்கப்படும்.
குழந்தை திருமணங்கள் நிகழ்வதற்கான காரணங்களை நிவர்த்திச் செய்வதற்கான 2025ஆம் தேசிய வியூக திட்டம்.
குழந்தை திருமணங்கள் நிகழ்வது தற்போதும் நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது. இந்த குழந்தை திருமணங்களால் பிற்காலத்தில் பாதிக்கப்பட போகும் குழந்தைகள் முக்கியமாகப் பெண் குழந்தைகளைப் பற்றிய அக்கறை பலரிடம் இருப்பதில்லை என்பதுதான் வேதனை கலந்த உண்மையாகும். எனவே, இந்த குழந்தை திருமணங்கள் நிகழ்வதற்கான காரணங்களை நிவர்த்திச் செய்வதற்கான 2025ஆம் தேசிய வியூக திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியாக 2020ஆம் ஜனவரியில் இந்த திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.